புதன், 22 டிசம்பர், 2010

கண்மலாரத கடவுள்

பிறந்த குழந்தையை உங்கள் கரங்களிட்டால்


மரத்துப்போன கரங்களை உடனே நீட்டிவிடாதீர்கள்.

மேகம் நிலவை மிதக்க வைப்பது போல்

மிக மெதுவாக எந்திகொள்ளுங்கள்.

விழி மூடியிருந்தால் எழுப்ப எத்தனிக்காதீர்கள்

அது இன்னும் கண்திறக்காத கடவுள்.



மருத்துவ விடுதி இரைச்சலையும் தாண்டி

மென்ஒலிகளால் உங்களுடன்பேச ஆரம்பித்தால்

பதிலுக்கு பேச முயற்ச்சிக்காதீர்கள்.

வாழ்க்கைப் புதிரின் மர்ம முடிச்சுகளை

அவிழ்க்கும் அதன் தேவபாஷையை

புரிந்து கொள்ள முயலுங்கள்.



அதுஅசைகிற கை,கால்களில்

அரூப சிறகுகளிருப்பதை அறிந்து தொடுங்கள்.



சட்டென அவசரத்தில் அதன் கன்னங்களில்

உங்களது உலர்ந்த உதடுகளால் முத்தமிட்டுவிடாதீர்கள்.

அது பூத்துத் தருகிற அபூர்வ சிரிப்பிற்காகக் காத்திருங்கள்.



நீங்கள் அமுத சுரபியை

கைகளில் வைத்திருக்க மட்டுமேஅனுமதிக்கப்பட்ட

அன்றாடங்காய்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்









நன்றி ரசனை இதழ் nov2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக